மங்கள்யானும், திறந்தவெளி மலம் கழிப்பு சிக்கல்களும்

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 260 கோடி மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்றும் அதனுடன் தொடர்புள்ள பிற சுகாதார சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அம்மக்களுக்கு கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரியும், கடந்த 2001ம் ஆண்டுமுதல் நவம்பர் மாதம் 19ம் தேதியை வருடந்தோறும் உலக கழிவறை நாளாக (World Toilet Day) “உலகக் கழிவறை நிறுவனம்” (World Toilet Organisation))கடைபிடித்து வருகிறது. அன்றைய தினத்தில் கழிப்பறை சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் பல மாநாடுகள், பேரணிகள் உலகெங்கிலும் நடைபெறுகிறன. இந்தியச்சூழலிலும், தமிழகத்திலும் திறந்தவெளி மலம் கழிப்பு சிக்கல்கள் எந்தளவில் உள்ளது, அதற்கான தீர்வை நோக்கி அரசு இயந்திரம் செயல்படுகிறதா, இச்சிக்கலினால் ஏற்படும் விளைவுகளை மக்கள் அறிந்தனரா என்பதை குறித்து சுருக்கமாக அலசுவதே இக்கட்டுரை நோக்கமாகும்.

images (1)

“திறந்தவெளி மலம் கழிப்பில் நாம் உலகின் தலைநகராய் இருக்கிறோம். இது மிகவும்,அவமானப்படத்தக்க, வேதனை மிகுந்த, கோபப்படத்தக்க விடயம் ஆகும்.”

“கோவில்களைவிட கழிப்பறைகளே இன்று நமக்கு அவசியத்தேவையான முக்கிய விடயமாக இருக்கிறது.”
“புதிதாகத் திருமணமாகும் பெண்கள் புகுந்த வீட்டில் கழிப்பறைகள் இருக்கிறதா என்று தெரிந்த பிறகே திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்”

“துப்புரவு குறித்த அரசியல் அக்கறைத்தன்மையை இதுகாறும் நான் பார்த்ததே இல்லை. துப்புரவு குறித்து பேசும்போது நாம் உடனே சிரிக்கிறோம். ஆனால் சிரிப்பதை தாண்டி இதில் சிக்கல் உள்ளது என நான் நினைக்கிறேன். அது சத்துணவு குறைபாட்டில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திகிறது”
– ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

கடந்த 2011 இல் எடுத்த புள்ளிவிவரப்படி (Census Of India) இந்தியாவில் தொலைக்காட்சி இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளைக் காட்டிலும் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளது என்ற தகவல் நம் புருவத்தை உயர வைக்கிறது. மேலும், இது முகம் சுழிக்க வைக்கும் சாதாரண சிக்கல் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் சொத்தை நிர்வாக செயல்பாடுகளால் நாம் இழக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஒப்பீட்டுப் பார்க்கையில் செவ்வாய் கிரகத்திற்கு ஏவூர்தி அனுப்பவதைக்காட்டிலும் இச்சிச்கல்களுக்கு தீர்வு காண முயல்வது அவசர அவசியமென்பது புலனாகும்.

இவற்றை கருத்தில் கொண்டே இந்தியாவின் பொருளாதார வல்லுனரான அமர்த்திய சென் இவ்வாறு கூறுகிறார்.

“உணவுப்பாதுகாப்பு மசோதா மற்றும் சமையில் எரிவாயு விலையேற்ற விடயங்களுக்கு மட்டும் குரல் குடுக்கும் இடதுசாரிக்கட்சிகள், திறந்தவெளி மலம் கழிப்பு சிக்கல்கள் குறித்தும் போதிய கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.

• ஒட்டுமொத்த இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 60 கோடி. (இதில் 50%பெண்கள் என்பது வேதனை தரும் உண்மை. இயற்கை உபாதைகளுக்கு அந்திமங்கும் நேரமும், அதிகாலையும் ஒதுக்குப்புறம் தேடிப்போகும் பெண்களின் பாதுகாப்பு நிலை இந்தியா எங்கும் கேள்விக்குறியே!)

• உலகெங்கிலும் திறந்தவெளி மலம் கழிப்போரில் 50% மக்கள் இந்தியாவில் வசிப்பவர்கள்.

• ஆண்டொண்டிற்கு 7 லட்சம் பார வண்டி (Truck Load) அளவிலான மலம் இந்தியாவெங்கிலும்அள்ளப்படமால் நிலத்தில், நீரில் கலந்து பெரும் நீர் சார்ந்த நோயினை தோற்றுவிக்கிறது.

• உலகின் அதிகமான குழந்தைகளின் எண்ணிக்கையை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதாவது 50 கோடி இந்தியர்கள் 18 வயதிற்கும் குறைவானவர்கள். இதில் 1 முதல் 5 வயதிற்குபட்ட குழந்தைகள் விஷக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, ஓர் ஆண்டில் உயிரிழக்கும் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம்! இது உலகளவில் நீர் சார்ந்த நோயினால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 30% ஆகும்.

• இந்தியக்குழந்தைகள் சராசரி உயரத்தை விட குறைவாக வளர்ச்சி குன்றி இருப்பதற்கு திறந்தவெளி மலம் கழிப்பு முக்கிய காரணமாய் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெருவிக்கிறது. அதாவது, மலத்தை மொய்க்கும் ஈ, கொசுக்கள் போன்றவற்றிலிருந்தும், நீர் மற்றும் உணவில் கலக்கும் மலங்களால் உடனடியாக வாயிற்றுப்போக்கு போன்ற தாக்குதல் ஏற்பட்டாலும் அது உடனடி விளைவை தோற்றுவிக்காத நீண்டகால நோயினை குடல் பகுதிகளில் உள்ள திசுக்களில் ஏற்படுத்துகிறது. வெளிப்பார்வைக்கு நோயின் அறிகுறிச் சுவடு அற்ற இவ்விளைவால் வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது என்று அவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.

• தமிழ்நாட்டில் 57 % குடும்பதாரர்களின் வீட்டினில் கழிவறை வசதிகளற்று திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர் என்று சமீபத்திய தேசிய குடும்ப நல அறிக்கை தெரிவிக்கிறது.

• அதாவது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடி மக்கள் கழிவறை வசதிகளற்று இருக்கின்றனர்.

• இதில் 50 % மக்கள் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் இரண்டு கோடி மக்கள் ஆற்றங்கரைகள், கம்மாய்கள் , கடற்கரைகள், வயல்வெளிகள் போன்ற திறந்தவெளியிடங்களில் மலம் கழிக்கின்றனர்.

• தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் 75% குடும்பதாரர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர்.

• 2% குடும்பத்தார்கள் வீடுகளில் மட்டுமே குழாய்கள் மூலம் ஒன்றிணைக்கப்படுள்ள கழிப்பறை அமைப்பு இருக்கிறது.

• 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ‘முழு சுகாதார இயக்கம்’ (Total Sanitation Campaign) இன்னும் போதிய செயல்பாட்டளவை எட்டவில்லை என்பது தெளிவாகிறது.

( உலகின் மிகப்பெரிய மல வெளியேற்று நிறுவனமான இந்திய ரயில்வே துறை திறந்வெளி தண்டவாளங்களில் வெளியேற்றும் மலங்களை இந்த புள்ளிவிவரங்களில் சேர்க்கவில்லை)
மேற்சொன்ன சில புள்ளிவிவரங்களை கவனத்தில் கொண்டு பார்த்தோமானால் இச்சிக்கலானது சிரிக்கத்தக்க மற்றும் முகம் சுழிக்கத்தக்க சிக்கல் மட்டும் அல்ல என்பதும் பெரும் சுகதாரக்கேடுகளுக்கும் ஊட்டச்சத்து குறைப்பாடிற்கும் திறந்தவெளி மலம் கழித்தல் எந்தளவிற்கு பின்விளைவுகளை ஏற்படுதுகிறதென்பது தெளிவாகிறது. உலக சுகாதார நிறுவனத்தின்படி(World Health Organization) திறந்தவெளி மலம் கழிப்பு என்பது “அனைத்தைக்காட்டிலும் அபாயகரமான சுகாதாரம் கேடு” என்றே கருதுகிறது.

mobile-toilet- copy

தமிழ்நாட்டில் நிலவும் திறந்தவெளி மலம் கழிப்பிற்கான காரணங்களைப் பார்த்தோமானால் அதிகரித்துவரும் நகர்மயமாக்களால் நகரத்திலிருந்து வெளியேறும் மக்கள் புறநகர்ப்பகுதிகளில் அதிகளவில் குடியேறுவதாலும், கிராமங்கள் புறநகர்ப்பகுதிகளாக வேகமாக உருமாற்றம் பெறுவதும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும், கிராமப்புறங்களில் கழிப்பறை அமைப்பு மற்றும் நீர்க்குழாய் அமைப்பு போன்ற கட்டமைப்பு குறைபாடும் இதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது.

கழிப்பிடங்கள் கட்டுவதற்கு அரசு கொடுக்கும் மானியத்தொகையான 2500 ரூபாயில் வெறும் நான்கு பக்க சுவர் மட்டுமே கட்டமுடிகிறதென்றும், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் இம்மானியம் போதுமானதாக இல்லை எனவும் துப்புரவு செயல்பாட்டாளர் கணபதி தமிழக அரசின் துப்புரவுத் திட்டத்தை விமர்சிக்கிறார்.

“புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பெரும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வரும் அதிகளவிலான புலம்பெயர் தொழிலாளிகள் மிகவும் மோசமான சூழலில், கழிப்பறை வசதியற்ற அறைகளில் தங்கவைப்பதால் வேறுவழியின்றி நீர்நிலைகள் அருகில் உள்ள ரயில்வே பாதைகள் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர்”

என்று கணபதி இச்சிக்கலின் மற்றுமொரு பரிமாணத்தை சுட்டிக்காட்டுகிறார்.
சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கிலான மங்கள்யானை வெற்றிகரமாக வானில் செலுத்திய அரசும், 2020 இல் வல்லரசு கனவோடு உள்ள இந்திய யூனியன் அரசானது இச்சிக்கலுக்கு எடுத்த தீர்வுகள் குறித்து பார்த்தோமானால்

 கடந்த 13ஆண்டுகளாக இச்சிக்கலுக்கு அரசு செலவழித்த தொகை போதுமானதாகவோ, ஆர்வமோடோ செயல்படுத்தவில்லை.

 பின், உலகின் பெரும் முதலாளிகளில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்சின் நிறுவனத்திடன் கையேந்தி, அவர்களுடன் கூட்டு சேர்ந்து “நிர்மல் பாரத் அபியான்” என்ற திட்டத்தின் அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் திறந்த வெளி மலம் கழிப்பை இல்லாதாக்குவது என்ற இலக்கை எட்டுவதாகும். கடந்த ஆண்டு ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் செயல்பட்டதைப் போன்றே “கழிப்பறைகள் மறு கண்டுபிடிப்பு” என்ற கோஷத்தோடு இந்தியாவிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்கும் முக்கிய நிறுவனங்களில் மைக்ரோ சாப்ட் தொண்டு நிறுவனம் முதன்மையானது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் தனது “மனிதநேய முதலாளித்துவ” கொள்கையின் அடிப்படையில் கொடைகளை வழங்குவது இந்நிறுவனத்தின் வழக்கமாகும். இதனால், அந்நாட்டு மக்களின் சிலர் சில சுகாதார பயன்களைப் பெற்றாலும் பில் கேட்ஸ் நிறுவனத்தின் உள்ளார்ந்த நோக்கமானது பணஞ்சார்ந்த ஆதயத்திற்க்காகவே என்று “நியூ இன்டெர்நேஷ்னலிஸ்ட்” இதழ் கடந்தாண்டு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது
• தன் நாட்டு மக்களின் அடிப்படைதேவையை பூர்த்திசெய்யும் செய்யும் நோக்கிலான ஒரு சுகாதார கட்டமைபை ஏற்படுத்தி செயல்படுத்த வக்கற்ற நிலையில் உள்ள அரசு இயந்திரத்தின் செயல்திறன்.

• அரசு இயந்திரத்தின் “மக்கள் நலத்திட்ட பணிக்கான” அலட்சியப்போக்கு.

• தன் நாட்டு மக்களின் சுகாதார கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த வெளிநாட்டு முதலாளிகளிடம் கையேந்த நிலையில் உள்ள வருங்கால வல்லரசின் “பொருளாதார கையிருப்பு”குறித்த கேள்விகளையும் இது எழுப்புகிறது.
உலக நிதி மூலதனத்தின் ஆதிக்க பிடியில் உள்ள மன்மோகன் சிங் அரசானது இதற்குமுன் இல்லாத வேகத்தில் நவீன தாரளாவாத கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. மயரம் குழுவின் பரிந்துரைப்படி சமீபத்தில் தொலைத்தொடர்பு துறையில் 100% மற்றும் வர்த்தகத்தில் 74 % அந்நிய முதலீடுகளை அது அனுமதித்தும்/அனுமதிக்க இருக்கிறது. இது முழுக்க முழுக்க வெளிநாட்டு கார்ப்ரேட்டுகளின் பிடியில் இத்துறைகளை ஒப்படைக்க நடத்தப்படும் முயற்சியாகும். இதோடு பாதுகாப்பு, பொதுத்துறை வங்கிகள் ,வானொலி மற்றும் பிற துறைகளின் முதலீடுகளுக்கு சாதமாக அச்சந்தைகள் திறந்து விட இருக்கிறது.

நடுவண் அரசானது உலக நிதி மூலதனத்திடம் தனது பொதுத்துறையில் உள்ள பொருளாதார ஆளுமையும் மட்டுமல்ல “மக்கள் நலத்திட்டங்களின்” மீதான பொருளாதார ஆளுமைகளையும், நிலவுகிற நவீன தாராளமயமாக்களின் கீழ் மெல்ல மெல்ல இழந்து வருகிறது. உலக நிதி மூலதனமானது முதலாளித்துவ அரசை ஒருபோதும் தனது நிதியை பொது நலத்திட்டங்களுக்கு “விரையம்”செய்ய அனுமதிக்காது. உதாரணமாக, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம்” இன்று கைவிடப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு “உலக நிதி மூலம்” இந்தியாவை இட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் அளவிலான நிதியோ, ஆர்வமோ, செயல்திட்டங்களையோ அற்ற அரசானது, இச்சிக்கல்கள் குறித்தான மாற்றை ஒருபோது முன்வைத்து தீவிரமாக செயல்படப்போவதில்லை. ஏனென்றால் இன்று நவீன தாராளமயமாக்கத்திலிருந்து மீண்டுவரும் வாய்ப்பு இந்தியாவிற்கு இல்லை. மீண்டு வருவதற்கான செயல்திட்ட சாத்தியமுடைய கொள்கைகளை நோக்கி நகர்வதிற்கும் போதுமான திராணியும் இல்லை. இச்சூழலில் தனது நாட்டு மக்களின் அடிப்படை சுகாதார திட்டங்களைக் முன்னெடுக்கக்கூடிய “பொருளாதார சுதந்திரம்” அற்ற ஒரு அரசு அதை மறைப்பதற்கு மேற்கொள்ளும் பல்வேறு மேற்பூச்சிகளை மட்டுமே இனி அனைத்து மட்டங்களிலும் தாரளமாக காணலாம். ஆனால் கோடிக்கணக்கான விளிம்பு நிலை மக்களே இதற்கு பெரும் விலை குடுக்கின்றனர்.

குறிப்புதவி தரவுகள்:
http://worldtoilet.org/wto/index.php/our-works/world-toilet-day
http://worldtoiletday.org/?page_id=11
http://articles.economictimes.indiatimes.com/2012-05-31/news/31921953_1_open-defecation-sanitation-campaign-gates-foundation
http://articles.economictimes.indiatimes.com/2013-06-28/news/40255980_1_defecation-child-nutrition-sanitation-ministry
http://articles.economictimes.indiatimes.com/2013-02-03/news/36721319_1_open-defecation-left-parties-open-toilets
http://www.thehindu.com/opinion/lead/the-long-and-short-of-open-defecation/article4505664.ece
http://newint.org/features/2012/04/01/bill-gates-charitable-giving-ethics/

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை.
arunpyr@gmail.com

Leave a comment