மதுரைப் பயணமும் பசுமை நடையும்

2013 ஜூன் 21ம் தேதி இரவு சென்னையிலிருந்து  மதுரைக்கு இரு நண்பர்களுடன் மதுரைக்கு பயணமானேன். மதுரை மாநகரை சுற்றிபார்ப்பதும், பசுமை நடையில் கலந்து கொள்வதும், மதுரை மாநகரின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் உணவருந்துவதும் தான் எங்களின் பயணத்திட்டம்.

மாட்டுத்தாவணிபேருந்து நிலையம் சென்றடைந்தபோது மணி 8 ஆகியிருந்தது. டவுன் ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜ் ரூம்களின் கட்டணங்கள் குறைவாக இருக்கும் என்பதால் மாநகரப் பேருந்தில் ஏறி பெரியார் பேருந்து நிலையம் சென்றோம். பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் தான் டவுன் ஹால் ரோட் உள்ளது, 2,3 லாட்ஜ்களில் விசாரித்து விட்டு குறைவான கட்டணம் கேட்ட லாட்ஜ் ஒன்றில் தங்க முடிவெடுத்தோம். ஏறக்குறைய அங்கிருந்த எல்லா லாட்ஜ் ரிசப்ஷன்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்கிறார்கள். காவல்துறையின் அறிவிப்பாம்.

166051_10200583503563672_1132832565_nஅறையில் குளித்து முடித்து வெளியில் வந்து டவுன் ஹால் ரோட்டில் உள்ள ஸ்ரீசபரீஷ் ஹோட்டலில் டிபன் சாப்பிட்டோம். சுவையான உணவுகளை பரிமாறுகிறார்கள். சென்னையில் சாதாரணமாக 7ரூபாய்க்கு டீ விற்கிறார்கள். ஆனால் இங்கே 10 ரூபாய் வாங்குகிறார்கள். டீயின் அளவும் அதிகமாக உள்ளது. சுவையும் அமர்க்களமாக உள்ளது.

கள்ளழகர் கோவில் செல்லலாம் என முடிவெடுத்து மாநகரப்பேருந்தில் ஏறினோம். சென்னையில் உள்ளது போலவே ஒரு நாள் முழுவதும் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய 50ரூபாய்க்கு பாஸ் வாங்கினோம். மூன்று பேருக்கு 150ரூபாய். மதுரை மாநகருக்கு வடக்கே 20 கி.மீ தொலைவில் உள்ளது அழகர்கோவில். வழியில் பேருந்து ஓட்டுனரிடம் விசாரித்ததில் அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது எனவும் ஒரு ஆளுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம்.

அங்கு பழமுதிர்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது என்று மேலும் ஒரு தகவலை02 கூறினார். அவருக்கு ஒரு பெரிய நன்றியை சொல்லிவிட்டு அழகர்கோவில் நிறுத்தத்தில் இறங்கி மலை உச்சிக்கு செல்லும் பேருந்திற்கு டிக்கெட் எடுத்தோம்.

பழமுதிர்சோலை வெற்றிவேல் முருகன் கோவில்:
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாகப் போற்றப்படும் பழமுதிர்சோலைக்கு ‘சோலைமலை’ என்ற பெயரும் உண்டு. திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்சோலை என்பதற்கு ‘பழம் முற்றிய சோலை’ DSC_0118என்று நச்சினிகினியார் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத்துதி பாடலில், வள்ளியம்மையை திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என முருகபெருமான் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

பழமுதிர்சோலைக்கு சற்று உயரத்தில்  நூபரகங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக உள்ளது. முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக்கதையும் சொல்லப்பட்டு வருகிறது. நூபுரகங்கை விழும் இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த தீர்த்த தண்ணீரில் பல அபூர்வ மூலிகைகள் கலந்து இருப்பதால் தினமும் இங்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடி செல்கிறார்கள்.

கள்ளழகர் கோவில்:

T_500_695அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோவில் கொண்டிருப்பதால் இம்மலை அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச்சோலைமலை, திருமாலிருஞ்சோலை, வனகிரி முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள். இவ்வாலயத்தில் ஆண்டாளுக்கு விசேஷமான ஆராதனைகளும் திருவிழாவும் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் ஆண்டாள் தன் தந்தையாகிய பெரியாழ்வாருடன் இவ்விடத்திற்கு வந்து பெருமானை தரிசித்து பாசுரங்கள் பாடியதும் கடைசியாக அவர் அழகரைக் கல்யாணம் செய்துகொண்டார் என்பதும் தான். பாண்டிய மன்னன் ஜடாவர்மன்  சுந்தரபாண்டியன் அழகர்கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்தான் என சாசனங்கள் மூலம் அறிகிறோம். இத்தலத்தில் கிழக்கு கோபுரவாயிலில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசாமி, பதினெட்டாம் படியான் என்றும் அழைக்கப்படுகிறார்.

இரு கோவில்களையும் தரிசித்து விட்டு வெளியே வந்ததும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகரப் பேருந்து கிளம்பத் தயாராக இருந்ததைக்கண்டோம். மணி மாலை ஐந்தைத் தாண்டியிருந்ததால் விரைந்து சென்று அதில் ஏறினோம். அடுத்ததாக பார்க்க வேண்டிய இடம் திருமலை நாயக்கர் அரண்மனை என முடிவு செய்து விட்டு மூவரும் லேசாக பேருந்திலேயே லேசாக கண்ணயர்ந்தோம். பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கி திருமலை நாயக்கர் அரண்மனை வழியாக செல்லும் பேருந்தில் ஏறினோம். அரண்மனையை அடைந்த போது கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. மதுரை மேப், ஃபோட்டோக்களை விற்கும் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். சுற்றுலா வரும் மக்களுக்காக ஒளி, ஒலி காட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும், மாலை 6:45க்கு ஆங்கிலத்திலும் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறும் என கூறினார். ஆங்கிலத்தில் கேட்க ஒரு ஆளுக்கு 50ரூபாயும், தமிழில் கேட்க ஒரு ஆளுக்கு 25ரூபாயும் கட்டணம் என்றார். 6;15மணிக்கு டிக்கெட் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் காட்சி ஆரம்பிப்பதற்குள் அரைமணி நேரத்தில் ஓரளவு மஹாலை சுற்றிப்பார்க்கலாம் என்றார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு டிக்கெட் கவுண்டரில் நிற்க தொடங்கினோம். டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே போனோம்.

DSC_0194கதவுக்கு வெளியே இருக்கும் போது அரண்மனை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று நாங்கள் பண்ணிய கற்பனைகள் அனைத்தும் கரையத்தொடங்கியது. அடடா, எத்துணை நுட்பமாக செதுக்கப்பட்ட சிற்பங்கள், பிரமாண்ட தூண்கள். இந்த அரண்மனையை கட்ட இரும்பைப் பயன்படுத்தவேயில்லை என்று கூறுகிறார்கள். செங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டு சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வேல்லைக்கருவை கலந்து பூசப்பட்டுள்ளது எனவும் சிலர் கூறுகிறார்கள். 17ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த அரண்மனை. ஒரு இத்தாலிய கட்டிடகலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக்கலைகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்கவாசல் மற்றொன்று ரங்கவிலாசம். இதில் சொர்க்கவிலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது சொர்க்கவிலாசம் பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த அரண்மனையில் திருமலை நாயக்கர் தனது 75வது வயது வரை தனது மனைவியுடன் வசித்ததாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. இந்த அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 58 அடி நீளமும், 5 அடி விட்டமும் கொண்டது. 1971ம் ஆண்டு தேசிய நினவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சிலப்பதிகாரத்தைப் பற்றி இக்காட்சிகள் நடத்தப்படுகின்றன. பலவண்ண மின்விளக்குகளின் ஒளி தூண்களில் விழுவதை அங்கு வந்திருந்த குழந்தைகள் வெகுவாக ரசித்து பார்த்தனர். இயக்குனர் மணிரத்னம் தனது ‘பம்பாய்’, ‘இருவர்’, ‘குரு’ போன்ற படங்களை இந்த அரண்மனையில் படமாக்கியுள்ளார்.

இரவு உணவுக்காக பேருந்து ஏறி சிம்மக்கல் சென்றோம். கோனார் மெஸ்ஸில் கறிதோசை, குடல் கொழம்பு, மூளை ரோஸ்ட், கொத்து புரோட்டா என  வெரைட்டியாய் சாப்பிட்டோம். அதற்கு பின் கிகர்தண்டா சாப்பிடலாம் என பொறி தட்டியது.

அநேக இடங்களில் மதுரையில் ஜிகர்தண்டா கடைகள் காணப்படுவதால் எங்கே சாப்பிடலாம்SAM_0187 என சாலையில் செல்லும் ஒருவரை கேட்டதற்கு நடந்து செல்லும் தூரத்தில் ‘பேமஸ் ஜிகர்தண்டா’ கடை உள்ளதாகவும், அங்கு ஜிகர்தண்டா ருசியாக இருக்கும் என கூறினார். நடையை வேகப்படுத்தி அங்கு சென்றோம். ஜிகர்தண்டா அருமையான ருசி. விலையும் குறைவு. ஜிகிர் என்றால் இந்தியில் இதயம் என்று அர்த்தம். ஆக ஜிகிர்தண்டா என்றால் இதயத்திற்கு குளிர்ச்சி தரும் பானம் என்று அர்த்தம். சென்னை பேருந்துகளில் பாஸ் என்று சொன்னால் வெகு சில நடத்துனர்களே காட்ட சொல்லுவார்கள். ஆனால் இங்கே எல்லா நடத்துனர்களும் காட்ட சொல்கிறார்கள்.

பசுமை நடை:
பசுமை நடையின் 23ம் நிகழ்வாக கருங்காலப்பட்டிக்கு சென்றோம். பசுமைநடை குழுவினர் ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்து மற்றும் பேருந்தில் ஏறினோம். சென்ற பசுமை நடை – கீழவளவிற்கு சென்றிருந்தோம். அதைப்பற்றிய செய்திக்குறிப்பு மதுரை பதிப்பு தினமலரில் வெளியானதாலும், பசுமை நடை குழுவினரின் அனுபவப் பகிர்வினாலும் சென்ற முறை வந்ததை விட அதிக மக்கள் வந்திருந்தனர். மேலூரிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் கருங்காலக்குடி என்னும் சிற்றூர் உள்ளது. அவ்வூரின் எல்லையிலேயே பேருந்துகளை நிறுத்திவிட்டு மலை உள்ள திசை நோக்கி அனைவரும் நடந்தோம். கொஞ்ச தூரம் நடந்ததும் பஞ்சபாண்டவர் குகை கம்பீரமாக நிற்பது தெரிந்தது. இந்த மலைக்குகை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளதாக அறிவிப்பு பலகை வாசகங்கள் தெரிவிக்கின்றன.

1‘கருங்காலிப்பட்டி’ என்ற சொல் திரிந்து கருன்காலக்குடியாக மாறியுள்ளது. காலி என்பது கன்றுக்குட்டியை குறிக்கும். பட்டி என்பது கால்நடைகளை அடைத்து வைக்கும் இடமாகும். கருமையான கன்றுக்குட்டிகளை வளர்த்த இடையர் இனம்(குடி) இங்கு வாழ்ந்ததால் ‘கருங்காலக்குடி’ என்று மாறியுள்ளது என தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா கூறினார். இம்மலையின் குகையிண் கீழ்த்தளத்தில் சுமார் 30 கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. குகையின் மேற்புறத்தில் ‘ஏழெய் ஊர் அரிதின் பளி’ என்ற தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இது கி.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்குகை 2சமணப்பள்ளியாகவும், அன்னதானம் அடைக்கலதானம், அறிவுதானம், மருத்துவகொடை வழங்கும் இடமாகவும் விளங்கியுள்ளது. குகைத்தளத்தின் இடதுபுறமுள்ள கற்பாறையில் சமணத்துறவியான அச்சணந்தி என்பவரின் உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. குகைத்தளத்தின் மேலே மிகப்பெரிய கற்பாறை பகுதிகளின் அடிபாகத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடியினரால் வரையப்பட்ட ஓவியங்களை காணலாம். ஆப்பிரிக்க, ஆசிய தேசங்களிலும் இதுபோன்ற பழமையான ஓவியங்கள் உள்ளன. நம் நாட்டில் உள்ள இத்தகைய ஓவியங்களை நாம் பாதுகாத்து அடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை என எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் கூறினார்.

பசுமை நடையை முடித்து விட்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தடைந்தோம். முந்தைய நாள் போலவே இன்றைக்கும் 50ரூபாய் பாஸ் எடுத்திருந்தோம். தல்லாகுளம் தந்தி அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இறங்கி காந்தி அருங்காட்சியகத்தை நோக்கி சென்றோம். தமுக்கம் மைதானத்தை அடுத்து தமுக்கம் அரண்மனை உள்ளது. இங்குதான் காந்தி மியூசியம் உள்ளது. தமுக்கம் என்றாள் கோடைக்காலத்தில் இளைப்பாறும் இடம் அல்லது வசந்தமாளிகை ஏன்ரு பொருள். நாயக்க வம்சத்தை சேர்ந்த இராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக இந்த அரண்மனை பயன்படுத்தப்பட்டுள்ளது. மதுரைக்காரர்களுக்கு தமுக்கம் என்றாலே கண்காட்சிதான் நினைவுக்கு வரும். சித்திரைக் கண்காட்சி, தொழிற் வர்த்தக கண்காட்சி என ஆண்டு முழுவது ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். சமீபத்தில் வெளியான ‘தூங்காநகரம்’ எனும் திரைப்படத்தின் பாடலொன்றில் ஒரு வரி வரும். ‘தல்லாகுளம் தமுக்கம் சித்திரையில் சிறக்கும்; தள்ளுவண்டி போட்டா கூட தங்கம் தான்டா”.

DSC_0268மகாத்மா காந்தி தமிழகம் வந்த 20 தடவைகளில் 5 முறை மதுரை வந்துள்ளார். தென்னிந்தியாவிலேயே காந்திக்கு என மியூசியம் உள்ள ஊர் மதுரை தான். இங்கு காந்தியின் அறிய புகைப்படங்கள், அவரின் ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்கு கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை என அறிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காந்தி அஸ்தியின் ஒரு பகுதி இங்கு தனியாக சதுக்கம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள குமார் மெஸ்ஸில் அசைவ சாப்பாடு, நெய்மீன் வறுவல், கோலா உருண்டை சாப்பிட்டுவிட்டு மாநகரப் பேருந்தில் டவுன் ஹால் ரோடு சென்றோம். அறையில் ஒய்வு எடுத்துவிட்டு, மாலையில் குளித்து புத்துணர்வு பெற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றோம். அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்துவிட்டு வெளியே வந்து ‘பிரேமா விலாஸி’ல் அல்வா வாங்கி சாப்பிட்டு விட்டு இரவு சென்னைக்கு பயணமானோம்.

–    கனகராஜ்
படங்கள்: அருண் மகாலிங்கம்  

5 Comments

  1. சில நாட்கள வாழ்தலும் வாழ்த்த திருப்தி கிடைப்பது இங்கு (மதுரை )மட்டும் தான் .

    Reply

  2. பாத்து பாஸ்ஸு… மதுரையைச் சுத்தின கழுதை கூட வேற இடத்துக்கு போகாதுன்னு எங்க ஊர்ல பழமொழி சொல்லுவாங்க்ய… போற போக்குல மதுரையில குடியேறிருவீங்க போலுக்கே…

    அப்புறம் மதுரைக்காரங்க்ய பூராம் டிசைன் டிசைனா சாப்பாட்டு வகைகளை கண்டுபிடிக்கிறதுல எக்ஸ்பெர்ட்டு… இன்னும் நீங்க சாப்பிட வேண்டியது நிறைய இருக்கு… எங்ககிட்ட கேட்ருந்தா பட்டியலே குடுத்திருப்போம்ல…

    Reply

  3. பிறந்து, வளர்ந்து, படித்தது என மதுரைகாரன் நான் , வேலை காரணமாக தற்போது விருதுநகரில் வசித்தாலும் நானும் மதுரைகாரன் என பெருமையாக சொல்லிகொள்ள உங்கள் பதிவு என் மனதின் ஓட்டதை வெளிகொண்டுவந்தது

    Reply

  4. மதுரை குறித்த தங்கள் பதிவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அழகர்கோயில், கருங்காலக்குடி குறித்த பதிவு அருமை. அரிட்டாபட்டியில் சந்திப்போம்.

    Reply

Leave a reply to இளஞ்செழியன் Cancel reply